வியாழன், 12 செப்டம்பர், 2013

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பக்தியோடு ஆண்டுதோறும் சென்று வழிபடும்-பிரான்ஸ் புனித சாட் அன்னை ஆலயம்-வீடியோ,வரலாறு இணைப்பு


பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள மிக முக்கியமான தேவாலயங்களில் சாட்மாதா தேவாலயமும் ஒன்றாகும். இது பரிஸ் மாநகரிலிருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தை-1020 ஆம் ஆண்டளவில் பாதிரியார் ஃபுல்பேர்ட் (Fullbert) என்பவரின் கோரிக்கைக்கு இணங்கி கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், 1030, 1134, 1194 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிபத்துக்களின் காரணமாக இத்தேவாலயத்தின் பெரும் பகுதி சேதமடைந்தது. 1194 ஆம் ஆண்டின் பின்னர் சுமார் 26 வருடங்கள் திருத்த வேலைகள் இடம் பெற்றன. 1210 ஆம் ஆண்டில் இருந்து இத்திருத்தலம் “எங்கள் மாதா” எனும் பொருட்பட “Our lady of Chartres” என்று அழைக்கப்படுகிறது.

1260 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 17 ஆம் திகதி (17/10/1260) லூயி மன்னர் வம்சத்தவராலும் போப் 4ஆம் அலெக்சாண்டராலும் முதல் முதலாக புனித அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.. 

பிரான்ஸில் வளர்ச்சியடைந்த “கொதிக் – Gothic)” கலை வடிவங்களில் அமைந்த மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட இத்தேவாலயமானது அழகிய கண்ணாடி வேலைப்பாடுகளையும், 3889 சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சமயக்கலவரங்கள் அற்ற அந்த கால கட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கொதிக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இத்தேவாலய கட்டிட வேலைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்து.

பிரான்ஸ் நாட்டின் பழைய கட்டுமான வேலைப்பாடுகளின் சிறப்பிற்கு இன்றுவரை சான்றாகவும் நினைவுச்சின்னமாகவும் திகழ்கிறது இந்த சாட்  மாதா தேவாலயம்.

நோய் வாய்ப்பட்டவர்களின் உடல் நலத்திற்காக பல நாடுகளில் இருந்து இத்தேவாலயத்தை தரிசிக்க ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றார்கள்.

பிரான்சில் வசிக்கும் தமிழ் மக்களும் சரி-வேறு நாடுகளிலிருந்து பிரான்சிக்கு வருகைதரும் தமிழ் மக்களும் சரி-மத வேறுபாடின்றி இந்த ஆலயத்தை தரிசிக்காமல் செல்வதில்லை.

தமிழ் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு வருடத்தில் ஒரு நாள் தமிழில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.!... 
மேலே இணைக்கப்பட்டுள்ள வீடியோ எமது வீடியோப்பதிவாளர்-திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் அண்மையில் பதிவு செய்யப்பட்டதாகும்.

0 commentaires:

கருத்துரையிடுக